tamilகன்னியாகுமரி-சென்னை விரைவு தொடர்வண்டி, வழக்கமான கம்பீரத்துடன் நாகர்கோயில் தொடர்வண்டி நிலையத்திற்குள் வந்து நின்றது.

இந்த பெட்டியில் ஏறிய அனைவரையும் அதில் அதிக இடங்களைப் பிடித்திருந்த கல்லூரி மாணவியர் ஆரவார ஒலியுடன் அணி செய் சொற்களால் வரவேற்க அவரவர் இருக்கைகளில் அமரந்தோம்.

மாணவியர் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே உரையாடினர்.

குறிப்பிட்ட காலத்திலேயே வண்டி நெல்லை இரயில் நிலையத்தை வந்தடைந்தது. எஞ்சி இருந்த இருக்கைகள் நிரம்பலாயின. வண்டியில் ஏறிய ஒருவர் என் துணவியாரைப் பார்த்து, “வணக்கம் பேராசிரியை அம்மா! பார்த்து பல நாட்களாகி விட்டது. இப்போது இராணிமேரி கல்லூரிக்கு வந்துவிட்டதாகக் கேள்விப் பட்டேன். கூட்டம் அப்புறமா வருகிறேன்” என்று கூறி அகன்றார்.

பேராசிரியை என்று அழைத்துவிட்டார். இதுபோதும்! இப்போது இந்த மாணவியர் என் துறை பற்றி அறிய முற்படுவர். தமிழ் என்று சொன்ன மாத்திரத்திலேயே  த…மி….ழா…. என்று ஒரு இழுப்பு இழுத்து, அப்படி என்னைப் பார்ப்பார்கள். இந்த முறை நான் உங்கள் இழுப்பை எப்படி சந்திக்கிறேன் என்று கருவிக் கொண்டார்கள்.

அப்படி ஓர் அமைதி மாணவியர் மத்தியின் குடிகொள்ள, தொடர்வண்டியும் மணியாச்சியிலிருந்து புறப்பட்டது.
எதிர்பார்த்தபடியே ஒரு மாணவி அருகில் அமர்ந்தபடி! “நீங்கள் பேராசிரியையா? மேடம்!”

“ஆமாம்” – என்றார்கள்.

“எந்த கல்லூரி நான் தெரிந்து கொள்ளலாமா?”

“இராணி மேரி கல்லூரி-சென்னை” என்றார் பேராசிரியை.

“அப்படீன்னா – டாக்டர் பட்டம் பெற்றிருக்கணுமே?”

“ஆமாம் பெற்றிருக்கிறேன்!”

“ஆய்வின் தலைப்பு?”

இக்கேள்வியின் உள் நோக்கத்தைப் புரிந்து கொண்ட பேராசிரியை, “உங்களுடைய இத்தனைக் கேள்விகளுக்கும் பதில் சொல்லி விட்டேன். இப்போது என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.
உங்கள் பாடப் பிரிவு?”

“கணிதம் – முதுகலை – இறுதியாண்டு”

“முழுமையான நல்ல பதில்” – என்று கூறிவிட்டு, ‘1+1 = ’ எவ்வளவு?” என்றார்கள்.

மாணவி, எரிச்சலின் எல்லைக்கே சென்று விட்டார்கள்.

“சிறுபிள்ளைத்தனமான கேள்வி.” என்றபடி முகத்தை அப்படி சுளித்தபடி பதில் தராமல் அமர்ந்திருந்தார்கள். மற்றவர்களும் பேராசிரியையை அப்படிப் பார்த்தார்கள்.

அந்த மாணவியை அணைத்தபடி “கற்றது கை பிடி, மண்ணளவே, கல்லாதது உலகளவு” என்று கூறியபடி, அங்கு நின்றிருந்த எட்டு வயது மதிக்கத்தக்க சிறுமியை சுட்டிக்காட்டி, அந்த சிறுமியை ‘1+1’ என்ன என்று கேட்டோமானால் ‘இரண்டு’ என பதில் தரும். காரணம் அந்த சிறுமி அப்படித்தான் கற்பிக்கப்பட்டிருப்பாள். அவளுக்கு இப்போதைக்கு இது போதும். ஆனால் கணிதமேதைகள்; “இடம், பொருள்; ஏவல்; அறிந்து பதில் சொல்ல வேண்டும். எனக்கு இது அரைவேக்காடு பதில்!”

“என்ன மேடம் சொல்கிறீர்கள் 1+1=2 என்பது முழுமையான பதில் இல்லையா?”

“ஆமாம்…? நான் உங்களிடம் உரிய பதிலை; நுண் திறனடங்கிய பதிலை எதிர்பார்க்கிறேன்.”

திணறிப்போன மாணவி, மன்னிப்பு கேட்டபடி, யோசிக்க அவகாசம் கேட்க, “நல்லது” என்றார் பேராசிரியர்.

“என்னடி ஒன்றுமில்லாத 1+1 ஐ வைத்து அவளை அப்படி மடக்கிட்டாங்க-பயமாத்தான் இருக்கு பார்ப்போம்.”

“மன்னியுங்கள் மேடம்”, என்று கூறி, தன் பெயரையும் கூறி, “நான் ஆங்கில இலக்கிய மாணவி” என்றார்கள்.

“நல்லது. என்னிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்.” பேராசிரியர்.

“என்னிடமும் ஏதாவது கேட்பீர்களானால் என் நிலை, எனக்கு தெரிய வாய்ப்பு கிடைக்கும்.”
சிரித்தபடி, ஆங்கில இலக்கணம் சுட்டும் “வவ்வல், கான்சனன்ட்” பற்றி தெரிய முயன்று கொண்டிருக்கிறேன்…! முடியுமா?” பேராசிரியர்

“தமிழில் உயிர் எழுத்து, மெய் எழுத்து என்பதுதான் ‘வவ்வல், கான்சனன்ட்’. ஆங்கிலத்தில் வேறு ஒன்றுமில்லை…” மாணவி.

“தமிழில் ‘உயிர்’ எழுத்து என்றால் ‘உயிரை’யே சுட்டும். ‘மெய்’ – ‘உடம்பை’யே சுட்டும். அதுபோல் ‘வவ்வல்’ எதைச் சுட்டுகிறது? இப்போது.. இப்போது உங்களிடம் மெய் எது?” பேராசிரியர்.

தன் உடம்பைத் தொட்டு “இது மெய்-மாணவி உயிர்… இந்த உடம்பை இயக்குவது?”

“நல்ல பதில்! இப்போது வவ்வலையும், கான்சனன்டையும் இதேபோல சுட்டுங்கள். நாளைய பேராசிரியை நீங்கள்!”

“மேடம்…. என்ன புரட்டிப் போட்டுட்டீங்க…!”

“சரி, நீங்களே உயிர் எழுத்து என்று சொன்னீர்கள், பின்னர் இந்த உடம்பை இயக்குகிறது என்று உங்களை வைத்தே பதில் சொன்னீர்கள். இந்த அடிப்படையில் உயர் என்றால் என்ன?” பேராசிரியர்.

“உயிர் என்றால் ஆன்மா….!”

“தத்துவம் பற்றி கேட்கவில்லை… அறிவர் அறிந்ததைச் சொல்.”

“தெரியவில்லை…! உயிர் போனால் பிணம்,” மாணவி.

உங்கள் ஆங்கில அகராதிகள் “ஒருவித ஆற்றல்” என்ற குறிப்பையும் தருகின்றன.

ஆற்றலை அறிவதற்கு இயற்பியல் துறை வேண்டும் என்று பேராசிரியர் கூறியதும், இதோ இவள் இருக்கிறாள் என்று ஒருமாணவியின் கரம் பற்றி இழுத்தன. ஏனைய மாணவியர்.

“ஆற்றல் பற்றித்தானே மேடம்.”

“ஆமாம்…”

“தடைகளைத் தாண்டியும் பணி புரியும் திறமை அப்படித்தானே!”

“தெரியும்-ஆனால் எனக்கு வேண்டியது இந்த ஆற்றலின் குணாதிசயங்கள். அடங்காற்றல், இயங்காற்றல் என்று எட்டுவிதமான ஆற்றல்கள் இருக்கின்றன. அவற்றின் பொதுவான குணங்கள் பற்றி சொல்ல முடியுமா?”

“உங்ககிட்ட உழைத்துத்தான் சொல்ல முடியும், நிறைய தெரிந்து வைத்திருக்கிறீர்கள்.”

“ஆற்றல், தானும் இயங்கும். இந்த ஆற்றலோடு தொடர்புடைய அமைவுகளை இயக்கும்” என்றபடி தலைக்குமேல் இயங்கிக் கொண்டிருந்த மின்விசிறியை காட்டியபடி… “இப்படி பன்னிரண்டு குணங்களை மட்டுமே அடையாளம் கண்டேன். ஆனால் இந்த ஆற்றல் அல்ல உயிர். இந்த பன்னிரண்டையும் தாண்டிய குணங்கள் இருக்க வேண்டும்” என்று பார்த்தபோது,

“உயிர் தங்கிய உடல் வளரும். வளர்ந்தபின் தளரும். ஆற்றலைப்போல் பிரிக்கவும் இணைக்கவும் முடியாது, என்று பத்து சிறப்பு குணங்கள் இருக்கக் கண்டேன். இந்த குணங்களுடன் ஆற்றலின் ஏழு குணங்கள் இந்த உயிரின் குணங்களுடன் பொருந்தி இருக்கக் கண்டேன். எனவே தமிழ் உயிர் எழுத்துக்களுடன் இவற்றைப் பொருத்தி பார்த்தபோது அனைத்தும் தத்துருவமாக பொருந்தி இருக்கக் கண்டபோது மகிழ்ந்து போனேன்.

இந்த மகிழ்ச்சியால், “மெய்” பற்றி அறிய முற்பட்டபோது, ஆற்றல் அதன் அமைவில் தங்கிய நிலையில் ஐந்து குணங்களும், உயிர் உடலில் தங்கிய நிலையில் ஐந்து குணங்களையும், அடையாளம் கண்டேன். இந்த அனைத்தும் மெய்யெழுத்திற்கு பொருந்தி இருந்தது. இதன் மூலம் தொல்லாசான் எதையும் ஏனோதானோ என்று கூறவில்லை. நாம்தான் பல பட்டங்களை பெற்று வைத்துக் கொண்டு “வவ்வல், கான்சனன்ட்” என்று குருட்டடி அடிக்கிறோம். என்று நினைத்தால், சென்னை பல்கலைக்கழக வெளியீடான ஆங்கில தமிழ் அகராதியிலும் ‘உயிரொலி, உயிரெழுத்து’ என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதேபோல் கான்சனென்ட் – ‘மெய்யெழுத்தொலி, மெய்யெழுத்து’ என்றே குறிப்பிட்டுள்ளார்கள். பரிதாபத்திற்குரியோர்.

ஆனால் இந்த ஆங்கில சொற்களுக்கு ஆங்கில அகராதிகள் தொடரும் காற்றொழுக்கால் ஏற்படும் பொதுவான உராய்வொலி ஒரு பேச்சொலி என்று வவ்வலுக்கும் “எந்த பேச்சின்போதும் காற்றொழுக்கை நிறுத்தி மற்றும் விடுவிப்பதால் ஏற்படும் சப்தமே கான்சொனன்ட்” என்றும்

இரண்டுமே காற்றொழுக்கால் ஏற்படும் சப்தம் சார்புடையது என்கிறது ஆங்கில அகராதிகள். உயிர், மெய் என்று சொல்லவே இல்லை. உயிர் மெய் தத்துவம் முற்றிலும் வேறுபட்டது. இது மட்டுமா? நம் இலக்கண நூலான தொல்காப்பியம் எழுத்துக்களை குற்றுயிர் நெட்டுயிர்; சார்பு எழுத்துக்கள், மெய்யெழுத்துக்கள்; உயிர் மெய்யெழுத்துக்கள் என்றும், உயிர் மெய் எழுத்துக்களில் (உடம்பு-கண்ணில் படும் என்பதால்) மெய்யை முதன்மைபடுத்தி முதலில் மெய் ஒலியும், அதனைத் தொடர்ந்து (பின்னர்) உயிர் ஒலி வரும் என்ற நுட்பம் இதன் பின் இவற்றை ஆறு எழுத்துக்களை மெல்லினம், ஆறு எழுத்துக்களை இடையினம், ஆறு எழுத்துக்களை வல்லினம் என்று பகுத்திருப்பதின் நுட்பம் இன்று வரையிலும் அறியப்படவில்லை. அறிய வேண்டும் என்ற உந்துதலும் இல்லை. அடுத்தாற்போல் இந்த எழுத்துக்கள் எல்லாம் பயன்பாட்டால் எப்படி எப்படி ஒன்றை ஒன்று தழுவிட ஒலிகள் மயங்குகின்றன என்பதனை அவ்வளவு தெளிவாக எடுத்துரைக்கிறார்.

இதைவிடச் சிறப்பு ஒவ்வோர் எழுத்துக்கும், மொழி ஒலி அளவுக்கு அலகு Unit என்றும், அலகாக “மாத்திரை” என்ற அலகை தந்து குற்றுயிர்க்கு ஒரு மாத்திரை, நெட்டுயிர்கு இரண்டு மாத்திரை, மெய்யுக்கு அரை மாத்திரை, ஒலி ஏற்ற இறக்க நிலைகளுக்கு பல்வேறு மாத்திரைகளையும் எடுத்துரைக்கிறார்.

நீளம் x அகலம் = பரப்பளவு என்பது போல்

ஒலியின் பருமனளவு x வேகம்= மாத்திரை என்றுணர்கிறேன்.
சரியா தவறா என்பதற்குரிய விளக்கம் இன்னும் கிடைக்கவில்லை. இதில் பருமனளவாக நொடித்தல் ஓசையையும், வேகத்திற்கு இமைத்தலையும் தருகிறார். அவர் காலத்தில் அவரால் எட்ட முடிந்தது. இன்றானால் டெசிபல் மற்றும் கட்சில் தந்திருப்பார். நம் மன்னவர்கள் கால அளவு என்கிறார்கள்.

எவ்வளவு அற்புதமாக அறிவியல் (Science) பிறளாமல் ஆக்கித் தந்தும் அட்டையைக் கழுவி சுத்தம் செய்து தொட்டிலில் போட்ட கதையாக தமிழன் நிலை நீடிக்கிறது. என்று வையுமோ இந்த நீழ் துயில்.”

“என்ன மேடம்! இவ்வளவு அறிவியல் கட்டுக்கோப்பும், செறிவும், ஆழமும் கொண்ட மொழியா தமிழ்? பெருமைப்படும்போது தலையும் சுற்றுகிறது மேடம். இந்த சிறப்புகளை தமிழர் அறிய வாய்ப்பே இல்லையா?” என்று மாணவியர் வினவ, கண்ணீரை காணிக்கையாக்கி, “படுக்கலாம்..” என்றார்கள் பேராசிரியை.

இந்த நேரம் கணித மாணவி பேராசிரியையின் கரங்களைப் பற்றியபடி மேடம் 1+1=2 விடுவியுங்கள்… பிளீஸ்…!

மாணவியை அன்புடன் அரவணைத்து “A கூட்டல் A சமம், இரண்டு A, A கூட்டல் B சமம்…!”

“ஓ!!! மேடம்! மேடம்! அசத்திட்டீங்க மேடம்!! ”

“கணிதப்படி இரண்டு; நுண்கணிதப்படி ஒவ்வோர் ஒன்றும் அடையாளம் காணப்படவேண்டும்.”

மகிழ்ச்சிக்கடலில் ஆழ்ந்த மாணவியின் கண்கள் அப்படி ஆனந்த கண்ணீரை சொரிந்தன.

 

சொ. அ.ல. கணேசன்,

முகவரி : A-37, அரசு உயர் அதிகாரிகள் குடியிருப்பு, டவர் பிளாக், டெயிலர்சு சாலை, சென்னை-600010. 044-26460297, 9444737451